சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா- 13

இனிச் சொல் என்பதன் இலக்கணம் பற்றி உரையாசிரியர் பலரும் கூறுவனவற்றைக்
காண்போம்.

சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை. எழுத்தொடு
புணர்தல் எழுத்தாதல் தன்மையொடு புணர்தல்-உரையாசிரியர் (தொல்.சொல்-1)

சொல்லாவது எழுத்தொடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறத்து
வருவது- சேனாவரையர். (தொல்.சொல்.1)

சொல்லாவது ‘எழுத்தினான் இயன்று பொருள் அறிவிப்பது’ தெய்வச்சிலையார்.
(தொல்.சொல்.1)

‘சொல்லப்படுதலால் சொல்’- மயிலைநாதர். (நன்.257) பொருளை உணர்வார்க்குக்
கருவியாவதன்றித் தானாக நின்று பொருளை உணர்த்தாது; அணுத்திரள்
முதற்காரணமாகப் பிறந்து மொழிக்கு முதற்காரணமாகி வந்த ஒலி தனியே நின்றும்
தொடர்ந்து நின்றும் பொருளைத் தோற்றுவித்தலின் பதமாம்’ என்பதும் மயிலைநாதர்
கருத்து. (நன்.258)

“சொல் என்றது, எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள் தன்மையும்
ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை. ஈண்டு ஆக்கப்படுதல் என்றது, ஒருசொல்
கூறுமிடத்து ஓரெழுத்துப்போக ஓரெழுத்துக் கூறுவதல்லது ஒருசொல்லாய் முடியும் எழுத்
தெல்லாம் சேரக்கூறல் ஆகாமையின், அவ்வெழுத்துக்கள் கூறிய அடைவே போயின
வேனும், கேட்டோர்க்குக் கருத்தின்கண் ஒரு தொடராய் நிலைபெற்று நின்று பொருள்
அறிவுறுத்தலை; ஆயின் ஓரெழுத்தொருமொழிக்கு ஆக்குதல் இன்றால் எனின், அதுவும்
செவிப்புலனாய்க் கருத்தின்கண் நிகழ்ந்து பின்னர்ப் பொருளை ஆக்குதலின், அதுவும்
ஆக்கும் தன்மை உடைத் தாயிற்று.