சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-731

அவாவியதனை அஃது உணர்த்தும் என்பதும் கருத்தாதல் அவர் உரையால் தெற்றெனப்
போதருகிறது. முனிவர் பேடு என்பதனை விளக்கப் பேடி என்ற சொல்வழக்கிற்கு
மேற்கோள் காட்டியுள்ளமை வியப்பாக உள்ளது. இவ்வாசிரியர் பேடு என்பதனை
நன்னூலார் போல அடிப்படைச் சொல்லா கக்கொண்டு அன் ஈறு புண்ரத்துப் பேடன்
என்பது ஆண்பால் எனவும் இகர ஈறுபுணர்த்துப் பேடி என்பது பெண்பால் எனவும்
கூறியதன்கண் இலக்கணக் குறைபாடு ஏதும் இன்மை உணர்க. ஆண்பேடு பெண்பேடு
என்றல் வேண்டா என்ற கருத்தானேயே இவ்வாசிரியர் ஈறுபற்றிப் பால் உணர்த்துமாறு
பேடன், பேடி என்ற சொற்களைக்காட்டியதூஉம் உணர்க. அலி என்ற ஆண்பாற்சொல்
பேடன் என்பதின் வேறாதலும் பேடன் என்பதன் பொருளதேயாதலும் அறிக. இலக்கிய
உதாரணம் கிடையாமை குறித்து ஆசிரியர் கூற்றைப்புறக்கணிக்க முயல்வது
ஏற்புடைத்தன்று. அஃது அவர்காலத்து உலகியல் வழக்கினதாகலாம். பேடு என்னும்
சொற்பற்றி நன்னூலில் இத்தகைய செய்தியை முனிவர்குறிப்பிடாமை வியக்கத்தக்கது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம்தமக் கிலவே
உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்.’

‘பெண்மைவிட்டு ஆணவா வுவபேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்.’
 





தொல்.சொல். 4



நன். 264