இது முற்கூறிப்போந்த உரிச் சொற்கு ஆவதொரு பொருட் புறனடை கூறுகின்றது. இ-ள்: முன்னும் பின்னும் வருபவை நாடிய வழி முற்கூறிய உரிச்சொற்களின் பொருள் நிலைமை அல்லாத வேறு பொருள் தோன்றும் ஆயினும் முற்கூறப்பட்டனவற்றொடு அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க என்றவாறு ‘தாவாத இல்லை வினைகளும்’ என்புழித் தா-கேடும், ‘நுணங்கு கொடியின்’ என்புழி நுணங்கு நுடக்கமும் உணர்த்தியவாறு கொள்க. பிறவும் அன்ன. 9 |