சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

470 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

உரிச்சொற்களுக்குப் பொருள் விளக்கம் நிரலே தரப்பட்டுள்ளது. கூறப்பட்ட
பொருள்களேயன்றி வேறுபொருள்களும் வரலாற்று முறைமையால் புதியன புகுதல்
என்பதனை ஒட்டி உரிச்சொற்கள் தரக்கூடும். அவற்றிற்கு ஓத்து இல்லை என்று
அவற்றைக் களைதல் கூடாது.

தா- என்பது வலிமை வருத்தம் என்ற பொருள்களை உடையதாதல் நூற்பாவினுள்
உள்ளது; கேடு என்ற பொருளில் வருதலும் கொள்க. இங்ஙனமே நுணங்கு- என்பது
நுண்மை என்ற பொருளோடு நுடக்கம் என்ற பொருள் படுதலும் கொள்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.390


உரிச்சொல் எழுத்துப் பிரிந்திசையாமை:
 

289. எழுத்துப்பிரிந்து இசைத்தல் இவண்இயல்பு இன்றே.
 

இஃது உரிச்சொற்கு எழுத்துப்பிரிந்து இசைத்தல் இன்று என ஐயம்
அகற்றுகின்றது.

இ-ள்: முதல்நிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறுபொருள் உணர்த்துதல் உரிச்சொல்லிடத்து இயல்பு உடைத்தன்று என்றவாறு.

பிரிந்து இசைத்தல் இவண்இயல்பு இன்று எனவே, திரிந்து இசைத்தல் இவண்
இயல்பு உடைத்து என்பதூஉம், பிரிந்து இசைத்தல் பிறாண்டு இயல்பு உடைத்து
என்பதூஉம் கொள்க. உரிச்சொல் எழுத்துத்திரிந்து இசைத்தன.