நூலின் பொதுவியல் சிறந்த பல இன்றியமையாத செய்திகளை உட்கொண்டுள்ளமை காண்க. ஈண்டுக் கூறப்பட்ட செய்திகள் மேல்சிறப்பாகத் தனித்தனி இயல்களில் கூறப்பட்ட பெயர் முதலிய நான்கு சொற்கும் பொதுவிலக்கணம் ஆதலின் இவ்வியல் இப்பெயர்த்து ஆயிற்று. ‘வழுவற்க’ என்பது முறை தவறி அமைத்தல் கூடாது என்பது. ‘வழீஇ அமைக’ என்பது ஒருவாற்றான் முறையன்றேனும் பிறிதொருவாற்றான் ஏற்புடைத்து ஆதலின் தவறு என்று நீக்காது தக்கது என்று ஏற்றுக்கொள்க என்பது. திணை முதலிய ஏழனுக்கும் வழாநிலை பற்றிய எடுத்துக் காட்டுக்களும், வழுப்பற்றிய எடுத்துக்காட்டுக்களும் தரப்பட்டுள்ளன. ‘வழாஅல் ஓம்பல்’ என்பது வழுவுதலை நீக்குக என்றவாறு. எனவே, இந்நிலை வழுவின், அவ்வழு இலக்கணத்தொடு மாறுபட்டதாம் என்பது. எடுத்துக்காட்டுக்கள் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் முடிக்கப்படுஞ் சொல்லாகவும் முடிக்குஞ் சொல்லாகவும் வைத்துத் தனித்தனியே திணைபால் இடம் பொழுது முதலியவாகிய இவற்றின் வழாநிலைக்கும் வழுவுக்குக் காட்டப்பட்டுள்ளன. சிறிது- பெரிது- என்பன தனிப்பட்ட முறையில் தத்தமக்கு அளவுஇன்றி, ஒன்றனை ஒன்றனொடு சார்த்தி உணர்தற்கண் கொள்ளப்பட வேண்டியன. ஆகவே ஒரே பொருள் தன்னினும் அளவிற்குறைந்த பொருளை நோக்கின் பெரியதாகவும், அளவில் மிக்க பொருளை நோக்கின் சிறியதாகவும் அமையும். ஆதலின் தனியே ஒரு பொருளைக்காட்டி, இது சிறிதோ பெரிதோ என்று வினவுவது வினாவழுவாம். |