சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-56699

என்பதனைப் பிறர் உணருமாற்றான் வெளிப்படுத்தற்கு உரிய சொற்களைப்
புலப்படுத்தியே இசையெச்சம் உணரப்பட வேண்டுதலின், புலப்படுத்தும் சொற்கள்
எச்சமாயின. இசையெச்சம் குறிப்பெச்சம் சொல்லெச்சம் என்ற மூன்றற்கும் இஃது ஒக்கும்.

உரையாசிரியர் இசை குறிப்பு எச்சங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டுக்கள்
எனவென் எச்சத்திலேயே அடங்கும் என்று சேனாவரையர் விரித்துக் கூறியதனையே
இவ்வாசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.

கற்கறித்து நன்கு அட்டாய் என்பது: தீங்கு அட்டாய் என்புழி, ஒரு சொல்லே
எச்சமாய் இருத்தலின் அது சொல்லெச்சமே என்பது இவர் கருத்து.

சொற்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருள் உணர்த்துதலை முன்னர்க்
குறிப்பிட்டார். அங்ஙனம் குறிப்பால் உணர்த்துவதனை வெளிப்படுப்பது எச்சமாதலின்
குறிப்பெச்சத்தை ஈண்டுக் குறித்துள்ளார்.

இவ்வெச்சங்கள் பற்றிப் பண்டைய உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள்
உள; அவற்றை விரித்தல் வேண்டா. மயிலைநாதர், புவிபுகழ் பெருமை அவிநயநூலுள்
தண்டலங் கிழவன் தகை வருநேமி யெண்டிசை நிறைபெயர் இராசபவித்திரப்
பல்லவதரையன் பகர்ந்தனவற்றையும், ஒல்காப்புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர்
கேள்வி இளம்பூரணரெனும் ஏதமில் மாதவர் ஓதியவற்றையும் குறிப்பிட்டார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 ‘பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின.’

‘ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.’
‘எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின.’

தொல்.சொல்.431
434
435