இஃது இடைச்சொல் பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: இடைச்சொல் எல்லாம் பிறிது ஒரு சொல்லை வேறுபடுக்கும் சொல்லாம் என்றவாறு. இஃது என் சொல்லியவாறோ எனின், பிறிது ஒரு சொல்லை வேறுபடுப்பனவும், பிறிது ஒருசொல்லான் வேறு எடுக்கப்படுவனவும் எனச் சொல் இருவகைப்படும். பிறிது ஒரு சொல்லை வேறுபடுத்தலாவது விசேடித்தல். பிறிது ஒரு சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது விசேடிக்கப்படுதல். இவை பொதுவகையான் எல்லாச்சொற்கும் கூறாமை எய்தும் ஆகலின், இடைச்சொல் எல்லாம் வேறுபடுக்கும் சொல் ஆவது அல்லது ஒருஞான்றும் வேறுபடுக்கப்படும் சொல்லாக என நியமித்தலாம். அவை அன்னவாதல் இடையிலுள் ஓதப்பட்ட இடைச்சொல் எல்லாம் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வருவழிக் கண்டு கொள்க.
வேற்றுமைச்சொல் வேற்றுமை செய்யும் சொல் என விரியும். வேற்றுமை எனினும் வேறுபாடு எனினும் ஒக்கும். இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல் ஆயினும், அவற்றுள் ஒரு சாரனவற்றை வேற்றுமைச்சொல் என்றார், சேற்றுள் தோன்றுவனவற்றுள் ஒரு சாரனவற்றைப் பங்கயம் என்றாற்போல என்பது. இதுவும் ஒரு நயம் என்க. |