சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

84 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட்கு ஆயினும்’ (யா.வி.67-மேற்)
எனவும்
 
  ‘பிறந்தவர்கள் எல்லாம்’ (சீவக.2622)
எனவும்,

வருவன எல்லாவற்றிற்கும் ரகர ஒற்றும் கள் என்ற விகுதியும் ஒருங்கு நிற்பினும்,
ரகரஒற்றே பால்விளக்கலின் ஏனைக் கள்ஈறு இசை நிறைந்து நின்றதேயாம். மேல்
இவ்வாறு வருவனவற்றிற்கு எல்லாம் இவ்வுரை கொள்க.
 

விளக்கம்


ரகர ஈறே பண்டையது. கள் ஈறு ஈண்டுப் புணர்த்தும் கூறல் பிற்பட்ட மரபு.
செய்யுள் மேற்கோள் நச்சினார்க்கினியர் உரைத்தவை. (தொல்.சொல்.171)
 

சூறாவளி


‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட்கு ஆயினும்’ என்றாற்போல்வனவற்றுள், கள்
என்னும் விகுதி இசை நிறைத்து நின்றதேயாம் என்றார். விகுதி இடைச்சொல் என்னும்
சொல் ஆகலான், ‘ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா’ (நன்.398) என்னும்
விதிபற்றிச் சிறப்பின்கண் வந்தமை அறியார் போலும்,
 

அமைதி
 

முனிவர் ‘ஒரு பொருட்பன்மொழி’ (நன்.398) என்ற நூற்பாவில், ‘சிறந்துநிற்றல்-
செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல்’ என்ற பொருளைத் தாமே
ஏற்றுக்கொண்டவர். இசைநிறை யாவும் செவிக்குச் சொல்லின்பம் தோன்றி
நிற்பனவேயாம். தாம் கூறியதையும் மறந்து முனிவர் இவ் வாசிரியரிடம் குற்றம்காண
விழைவது விந்தையே.