நூலமைப்பு இலக்கண விளக்கச் சொல்லதிகாரம் நன்னூலின் சொல்லதிகாரம் போல ஐந்து இயல்களை உடையது. தொல்காப்பியப் பெயரியல் வேற்றுமையியல் வேற்றுமைமயங்கியல் விளிமரபு என்பனவற்றில் கூறப்பட்டன யாவும் பெயரியலில் இடம் பெற்றுள்ளன. பெயரியலை யடுத்துத் தொல்காப்பியம் போலவே வினையியலும் இடையியலும் உரியியலும் காணப்படுகின்றன. தொல்காப்பியத்துக் கிளவியாக்கம் எச்சவியல் என்பனவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் பலவும் இச்சொல்லதிகார இறுதியியலாகிய பொதுவியல் இடம் பெறுகின்றன. நன்னூலார் பொதுவியலைச் சொல்லதிகாரத்தின் மூன்றாம் இயலாக வைத்திருக்கவும், இவர் இறுதியியலாக வைத்துள்ளமை குறித்துணரத்தக்கது. சொற்படலத் தொடக்கத்து நூற்பாவானது தற்சிறப்புப் பாயிரமாய்ப் பெண் சுமந்த பாகத்துப் பெருமானை வணங்கி அவன் திருவருளால் சொல் விளக்கப்படும் செய்தியைக் குறிக்கிறது. பொதுமொழியாவது ஒருகால் தனிமொழியாகவும் ஒருகால் தொடர்மொழியாகவும் அடங்குதலான், அதனைவிடுத்துச் சொல் தனிமொழி தொடர்மொழி என்ற இருபாகுபாட்டோடு தன்னையும் பொருளையும் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் அறிவிக்கும் செய்தி கூறப்பட்டுள்ளது. நூற்பாவுரையுள் முயற்கோடு ஆமைமயிர்க்கம்பலம் முதலாகிய பொய்ப்பொருளையும் சொல் உணர்த்துமாறு குறிக்கப்பட்டுள்ளது. தனிமொழியாவது |