சமயவாற்றலால் பொருள் விளக்கும் என்பதும், தொடர்மொழி அவாய்நிலை தகுதி அண்மைநிலை என்ற மூன்று வகையான் தொகைநிலையாகவும் தொகாநிலையாகவும் பொருளைவிளக்கும் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன. அடுத்து, மக்கட்பொருளே உயர்திணை என்பதும், ஏனையபொருள்கள் அஃறிணை என்பதும் தொல்காப்பியத்தை ஒட்டிச் சுட்டப்பட்டுள்ளன. உயர்திணையின் மூன்று பாற் பகுப்பும் அஃறிணையின் இரண்டு பாற்பகுப்பும் அடுத்துஇடம்பெற்றுள்ளன. பேடு என்ற பொதுச்சொல் அன்ஈறுபெற்றுப் பேடன் என ஆண்பாலாகவும் இகரஈறுபெற்றுப் பெண்பாலாகவும் உயர்திணைப்பாற்படுதலும், தெய்வப்பெயர்கள் உயர்திணையாவதாலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பின், மூவிடங்களைச்சுட்டிப் படர்க்கைவினையும் பெயருமே திணைபால் அனைத்தும் காட்டும் என்பதும், தன்மையும் முன்னிலையும் ஒருமை பன்மைகளையே சுட்டும் என்பதும் விளக்கப்படுகின்றன. இயல்புவழக்கு வகை மூன்றும் தகுதி வழக்கு வகை மூன்றும் நன்னூல் போலவே விளக்கப்பட்டுள்ளன. அடுத்து, நன்னூலை உட்கொண்டு செய்யுளின் இயல்பு சொல்லப்பட்டுள்ளது. பின், தம் கருத்திற்கேற்பக் குறிப்புமொழிகள் ஆசிரியரால் சுட்டப்பட்டுள்ளன. சொல்லின் இயற்சொல் திரிசொல் என்ற பாகுபாடும் பெயர் வினை இடை உரி என்ற பாகுபாடும் திசைச்சொல் வடசொல் என்ற பாகுபாடும் சுட்டப்பட்டபின், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்பனவற்றின் இலக்கணமும் சுட்டப்பட்டுள்ளது. |