பெயர்ச்சொல்லிலக்கணமும், ஆண்பால் பெண்பால் பலர்பால் பலவின்பாற் பெயர்களின் விளக்கமும் நன்னூலை யொட்டியே கூறப்பட்டபின், ஒன்றன்பால் இலக்கணத்தில் சிறிது வேறுபாடு சுட்டப்பட்டுள்ளது. பால்பகா அஃறிணைப்பெயர் விளக்கமும் பொதுப்பெயர் விளக்கமும் நன்னூலை ஒட்டியே கூறும் ஆசிரியர், பன்மை சுட்டிய பெயரை மாத்திரம் தொல்காப்பியத்தை ஒட்டி விளக்கமுற்பட்ட திறம் பொருந்துவதாக இல்லை. மொழியின் காலப்போக்கிற்கு ஏற்ப நன்னூலார் ‘ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும்’ என்ற சொற்றவாறே தாமும் கொள்ளாது, அந்நூற்பாவில் ‘பன்மை சுட்டிய பெயரலங் கடையே’ என்ற அடியை இணைத்துப் பன்மை விரவுப்பெயரை மாத்திரம் தொல்காப்பியனாரை ஒட்டி விளக்கமுற்படுவது, மொழியின் வளர்ந்த இயல்புக்கு ஏலாத செய்தியாதல் அந்நூற்பாஉரை விளக்கத்துள் விளக்கப்பெறும். வினைப்பெயர் படர்க்கையிடத்தேயாம் என்பதும் வினையாலணையும் பெயர் மூவிடத்தும் வரும் என்பதும் கூறப்பட்டுள்ளன. தன்மை முன்னிலை ஒருமைப் பன்மைப்பெயர்களின் பட்டியலும் ஒருவன் ஒருத்தி ஒருவர் என்ற சொற்களியல்பும் அடுத்து மொழியப்பட்டுள்ளன. ஒருவரைப்பற்றிய நூற்பா வுரையுள் இயற்பெயர் மருங்கின் ஆரைக்கிளவி, ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி, ஒன்றனைக் கூறும் பன்மைக்கிளவி, திணையொடு பழகிய பெயர் முதலியனவும் விளக்கப்பட்டுள்ளன. ஆகுபெயர்ப் பகுப்பினை நன்னூலையொட்டியே சொற்ற ஆசிரியர், தொல்காப்பியனாரை ஒட்டி எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாது போன்றவற்றை விளக்கியுள்ளமை குறித்துணரத்தக்கது. ஆகுபெயர் பற்றித்தொல்காப்பிய உரைகளிலுள்ள பலசெய்திகளும் ஈண்டு இடம் பெற்றுள்ளன. |