வேற்றுமை ஏழு என்ற பிறன்கோளும் எட்டு என்ற தம் கோளும் சுட்டும் ஆசிரியர், வேற்றுமை பற்றிய நூற்பாக்களைப் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியும் சிறுபான்மை தொல்காப்பியத்தை ஒட்டியும் நுவன்று, தொல்காப்பியனார் கருத்துக்களையும் சேனாவரையர் உரைச்செய்திகளையும் பெரும்பாலும் தம் உரையில் தவறாது குறிப்பிட்டிருக்கிறார். விளி பற்றிய செய்திகள் யாவும் நன்னூற் செய்திகளே. விளி யேலாப்பெயர்களைத் தொல்காப்பியனாரை ஒருபுடை ஒட்டிக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, பொருள்மயக்கம் உருபுமயக்கம் என்பனவற்றை விளக்கி, வேற்றுமைமயங்கியல் பற்றிய செய்திகள் பலவற்றையும் உரையில் தந்துள்ளார். பின், முதல்சினைப் பெயர்களும் பிண்டப் பெயர்களும் உருபு ஏற்குமாற்றை விளக்கி, ஐ ஆன் கு என்ற உருபுகள் திரியுமாற்றையும் தெரித்து, உருபு ஏற்ற பெயர்கள் கொள்ளும் முடிபையும் விளக்கி, உருபும் பொருளும் உடன்தொக்க தொகையையும் தொழில்முதல்நிலை எட்டனையும் தொல்காப்பிய நூற்பாக்கள் உரைகள் இவற்றைக்கொண்டே விளக்கிப் பெயரியலை முடித்துள்ளார். இப் பெயரியல் உரையில் தொல்காப்பியச் சேனாவரையர் உரைப்பகுதி பலவும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி சிலவும் இயைபுபற்றி வரையப்பட்டுள்ளன. நூற்பாவின் மிகைச் சொற்களுக்கு விளக்கம்காணும் வாயிலாக நூற்பாவால் விளக்கப்படாத தொல்காப்பியச் செய்திகள் பலவும் எஞ்சாமல் தழுவப்பட்டுள்ளன. |
வினையின் இலக்கணம் தொல்காப்பியத்தை ஒட்டிக் கூறப்பட்டுள்ளது. எழுத்துப் படலத்துள் கூறப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வினைச்சொற்கள் தோன்றும் என்பதும், அவை முற்று பெயரெச்சம் வினையெச்சம் என்ற மூன்று பிரிவுடையன என்பதும், அவை சிறப்புவினை பொதுவினை என இரு வகையின என்பதும், |