பாயிரம் நூலாசிரியர் கருத்தை உட்கொண்டு எழுப்பட்டது ஆகலானும், நூலாசிரியர் தம் பொது நிறுத்த முறையைத் தாமே கூறும் மரபு இன்மையானும், பாயிரம் ‘ஒத்த சூத்திரம்’ (தொல்.பொருள். 653) எனப்படும் ஆகலானும் பாயிரம் கூறியதும் ஒற்றுமை நயத்தால் நூல் கூறியதாகவே உட்கொண்டு, இங்ஙனம் பாயிரத்துள் நிறுத்த முறையையே நூலாசிரியர்தம் நிறுத்த முறையாக ‘எழுத்து முதல் மூன்றையும்’ என்று கொண்டுகூறப்பட்டது. சொல் எழுத்தினான் ஆக்கப்படுதலின் சொற்படலம் எழுத்துப்படலத்தொடு இயைபுடைத்தாயிற்று. பல செய்திகளைக் கூறும் ஒன்றற்குத் தலைமை பற்றியோ பன்மை பற்றியோ பெயரிடுதல் ‘ஒருபெயர்ப் பொதுச் சொலுள்’ தொல். சொல், 47 என்ற நூற்பாவால் உணரப்படும். சொல், சொல்லப்படும் மொழி என்ற நேரிய பொருள் தாராது சொல்லிலக்கணமாகிய போந்தபொருள் குறித்தலின், ஆகுபெயர் எனப்பட்டது. மனம் மொழி மெய் என்ற மூன்றனுள் ஒன்றன் செயல் கூறவே, ஏனைய இரண்டன் செயலையும் உட்கொள்க என்பது. |