என்பது சூத்திரம். இவ்வதிகாரம், மேல் பாயிரத்துள் எழுத்து முதல் மூன்றையும், எனநிறுத்த முறையானே எழுத்து உணர்த்திச் சொல் உணர்த்துகின்றார் ஆகலின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. சொல்லை உணர்த்திய அதிகாரம் எனவிரிக்க. சொல் என்றது அதன் இலக்கணம். அதிகாரம் என்றது முறைமை. சொல்லாவது ஓரெழுத்தானும் ஈரெழுத்தானும் இரண்டு இறந்து இசைக்கும் பல எழுத்தானும் ஆக்கப்பட்டுப் பொருளையும் தன்னையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை ஆகலின், மேல் அதிகாரத்தொடு இயைபு உடைத்து ஆயிற்று. இவ்வதிகாரத்துள் ஐவகை ஓத்தினால் சொல் இலக்கணம் உணர்த்துகின்றார். அவற்றுள் இம்முதல் ஓத்துப் பெயர்ச் சொற்களது இயல்பு உணர்த்திற்று ஆகலின், பெயரியல் என்னும் பெயர்த்து. சிறுபான்மை ஏனை இலக்கணங்களையும் உணர்த்திற்றேனும் பெயரியல் என்பது பண்பைபற்றிய வழக்கு; தலைமை பற்றிய வழக்கு எனினும் அமையும். இதனுள், இத்தலைச்சூத்திரம், கூறத்தொடங்கிய பொருள் இனிது முடியும்பொருட்டு வணக்கமும் அதனான் முடிபு எய்தும் பொருளும் உணர்த்துவதாகிய சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. இ-ள்: உமாதேவியோடு பொருந்தி உலகத்தைக் காத்து நிலைபெறச்செய்யும் இறைவன் தாளைவணங்கி யான் சொல்லுவன் சொல்லிலக்கணத்தை என்றவாறு. |