நாளை உண்டான்- நெருநல் உண்பான்- உண்டான் நாளை- உண்பான் நெருநல்- என்பனபோல ஒருகாலச் சொல் ஒருகாலச் சொல்லொடு முடியும் காலவழுவும், ஒருவிரல்காட்டிச் சிறிதோ பெரிதோ- கறக்கின்ற எருமை காட்டிப் பாலோ சினையோ என்பனபோல வினாவப்படாத பொருள்பற்றி வரும் வினா வழுவும். கடம்பூர்க்கு வழியாதோ என இடம்பூணி என் ஆவின் என்று- கருவூர்க்கு வழி, யாதோ எனப் பருநூல் பன்னிரு தொடி- என்பன போல வினாவுதற்கு இறைஆகாச் செப்பு வழுவும், யானைமேய்ப்பானை இடையன் என்றும், மாடுமேய்ப்பானைப் பாகன் என்றும் பிறிது ஒரு காரணம் பற்றாது ஒரு பொருட்கு உரிய வழக்கு ஒருபொருள் மேல் சென்றது எனப்படும் மரபு வழுவும் என எழுவகையாம் என்பதூஉம் பெற்றாம். பிறவும் அன்ன. 1 |