பொதுவாக்கி, இடமும் காலமும் நியமித்துக்கூறும் செய்யுள் வழக்கு
என்றே கோடும். மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக
வழக்குப்போலப் புனைந்துரை வகையால் கூறுவது என்னின், உலகியல்,
இன்றாம். இன்று ஆகவே, ஆகாயப்பூ நாறிற்று என்புழி, அது சூடக்
கருதுவாரும் இன்றி, மயங்கிக் கூறினார் என்று உலகம் இழித்திடப்
படுமாறுபோல இழித்திடப்படுதலானும், இல்லது ஒன்று கேட்டார்க்கு
மெய்ப்பாடு பிறந்து இன்பம் செய்யாது ஆகலானும், உடன் கூறிய உலகியல்
வழக்கினை ஒழித்தல்வேண்டும் ஆகலானும் பொருந்தாது என்க.
"அவைதாம்" எனப் பொதுப்படக் கூறினாரேனும், "தொல்இயல் வழாமல்"
என்றலின், இங்ஙனம் பயின்று வருதல் ஐந்திணையுமே ஆதலின் அவையே
இவ்வாறு கூறப்படும் என்றும், ஏனைக் கைக்கிளையும் பெருந்திணையும்
அங்ஙனம் பயின்று வாராமையின் சிறுபான்மை கூறப்படும் என்றும்
உய்த்துஉணர்ந்து கொள்க.
வரலாறு :