இவ்வாசிரியர் புலன்நெறி வழக்கத்திற்குக் கூறிய விளக்கம்
தொல்காப்பியப் பொருட்படலம் 4, 53 ஆகிய நூற்பாக்களின் உரையில்
நச்சினார்க்கினியர் உரைத்தனவேயாம்.
நாடக வழக்கு நான்கு வகைப்படும். அவையாவன: உள்ளோன்
தலைவனாக உள்ளது புணர்த்தல், உள்ளோன் தலைவனாக இல்லது
புணர்த்தல், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், இல்லோன்
தலைவனாக இல்லது புணர்த்தல் என்பன.
இங்குக் கூறும் நாடகவழக்காவது உள்ளோன் தலைவனாக இல்லது
புணர்த்தலாம். உலகியலாவது எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும்
நிகழும்; இங்குக் கூறும் நாடகவழக்காவது ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு
காலத்தில் நிகழக்கூடிய செயலை இன்ன இடத்தில் இன்ன காலத்தில் நிகழ
வேண்டும் என்று வரையறை செய்து, பின் அதனை எல்லோரிடமும்
நிகழ்வது போலச் செய்யுளில் அமைப்பதாம். ஒரு காலத்தும் நிகழ்த்தல்
இயலாதசெய்தியை விரித்துக் கூறின், அதனை நன்மக்கள் ஏலார். அச்செய்தி
பரிகசிக்கப்படுமே அன்றிக் கேட்டார்க்கு இன்பம்தாராது ஆதலின், ஈண்டுக்
கூறும் புலன்நெறி வழக்கம் உலகியலேயாம். அதனுள்ளும் ஐந்திணையே
பெரும்பான்மையும் நிகழும். ஏனைய இருதிணையும் அருகியே வரும்.