அகத்திணையியல்-நூற்பா-10                               111


 

               முல்லை - காடும் காடுகள் சார்ந்த இடமும்;
               மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்;
               நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்.

 இவ்வாறு நிலன் பத்துப்பகுதியினை உடைத்து.

 "அவற்றுள், நடுவண் ..... பண்பே"-

     முற்கூறிய எழுதிணையுள், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற
 ஒழுக்கத்தினை, ஒலிக்கும் திரை சூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்
 கொடுத்த இலக்கணத்தை, நடுவணதாகிய பாலையை அவ்வுலகம்  பெறாதே
 நிற்கும்படியாகச் செய்தார் என்றவாறு.

     குறிஞ்சியும் முல்லையும் பல ஆண்டுகள் மழையின்றி ஒழியின்
 வன்பாலையாகும்;  அவையே மீண்டும் மழைவளம் பெறின் முறையே
 குறிஞ்சியும் முல்லையும் ஆகும்; மருதமும் நெய்தலும் பல ஆண்டுகள்
 மழைவளம் பெறாது ஒழியின் மென்பாலையாகும்; அவையே மீண்டும்
 மழைவளம் பெறின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும் ஆதலின்,
 தொல்காப்பியனார் பாலைக்கு எனத் தனியே நிலம் கூறவில்லை.

     மதுரைக்காஞ்சியில் ஏனைய நான்கு நிலங்களோடு பாலையும்
 வருணிக்கப்பட்டுள்ளது.  பாலைக்கலியும், பாலைக்குறுநூறும், அகநானூற்றுள்
 ஒற்றைப்படை எண்ணுடைய பாடல்களும்; நற்றிணை குறுந்தொகைப்
 பாடல்கள் சிலவும் பாலை நில வருணனை தருதலின்" பின்னுள்ளோர்
 பாலையைத் தனிநிலமாகக் கூறுதல் முன்னோர் நூலொடு முரணாது
 என்பதாம்.

     "முதலொடு புணர்ந்த யாழோர் மேன
     தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்பெறுமே"         (தொல். பொ. 106)