அகத்திணையியல்-நூற்பா-13                               117


 

 வைகுறுவாம்; இனி, அக்கங்குல் தங்கிக் கழிந்துபோகும் நேரம் என்பதும்
 ஆம்.

     விடியல் வெங்கதிர் - விடியற்காலத்தில் தோன்றும் விரும்பத்தக்க
 கதிரவன். வைகுறு பற்றிய விளக்கம் யாவும் நச்சினார்க்கினியர்
 உரைத்தனவே. (தொல். பொ. 8 நச்)

     முன்மொழி நிலையல் - வைகறை என்ற சொல்லில் பொருள் சிறத்தல்

     சிறுபொழுது ஐந்தே என்பதனை வலியுறுத்த முற்படும் முனிவர்

     "காலையும் பகலும் கையறு மாலையும்
     ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
     பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்".            குறுந். 32

     என்னும் குறுந்தொகைப் பாட்டினுள் சிறுபொழுது ஐந்தே
 கொள்ளப்பட்ட செய்தியையும், "விடியல் வெங்கதிர்" (கலி. 45) என்பதற்கு
 விடியற்குப்பின்னர்த்தாகிய வெங்கதிர் என்பதே பொருள் என்ற
 விளக்கத்தையும் சூத்திரவிருத்தியில் குறிப்பிட்டுள்ளார். நம்பி அகப்பொருள்
 நூலாரைப் பின்பற்றிச் சிறுபொழுது ஐந்து என்ற சிவஞானமுனிவரைப்
 பின்பற்றி முத்துவீரியநூலாரும் சிறுபொழுது ஐந்தே என்றார். இவ்வாசிரியர்
 தொல்காப்பியனாரை ஒட்டிச் சிறுபொழுது ஆறே எனக் கொண்டுள்ளார்.

     "சிறுபொழுது ஐந்து சாலாது; ஆறே" என்ற கருத்தை, திரு கணேசையர்
 அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்கள்.

செந்தமிழ்த் தொகுதி 29-பகுதி 10

ஒத்த நூற்பாக்கள்

     "மாலை யாமம் வைகறை எற்படு
     காலை வெங்கதிர் காயும்நண் பகலெனக்
     கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும்.            ந. அ. 12