அகத்திணையியல்-நூற்பா-14                               119


 

     அவற்றுள்,

 376 கூதிர் யாமம் முன்பனி என்றுஇவை
     ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆதலும்
     வேனில் நண்பகல் பின்பனி என்றுஇவை
     பான்மையின் உரிய பாலைக்கு ஏற்றலும்
     மல்குகார் மாலை முல்லைக்கு வகுத்தலும்
     மருதம் நெய்தல் என்றுஇவை இரண்டற்கும்
     உரிய பெரும்பொழுது ஆறொடு முறையே
     வைகுறு விடியல் மருதத்திற்கு உறுதலும்
     வெய்யோன் பாடு நெய்தற்குச் சிறத்தலும்
     எய்தும் என்மனார் இயல்புஉணர்ந் தோரே.

     

     இது மேற்கூறிய காலப்பகுதிகள் திணைக்கு உரிய ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் மேற்கூறிய காலம் என்னும் முதற்பொருள் பகுதி
 பன்னிரண்டனுள் கூதிர்க்காலமும் இடையாமமும் முன்பனிக்காலமும் என்று
 கூறப்பட்ட காலப்பகுதிகள் மேற்கூறிய குறிஞ்சித் திணைக்குச் சிறந்தன
 ஆதலும், வேனிற் காலமும் நண்பகலும் பின்பனிக்காலமும் என்று கூறப்பட்ட
 காலப்பகுதிகள் ஊழான் அடுத்த பாலைத்திணைக்குச் சிறந்தன ஆதலும்,
 கருப்பொருள் பொலிதற்குக் காரணம் ஆகிய கார்காலமும் மாலையும்
 முல்லைத்திணைக்குச் சிறந்தனவாகக் கூறுதலும், மருதமும் நெய்தலும் என்று
 கூறப்பட்ட இரு திணைக்கும் சிறந்த பெரும்பொழுது ஆறொடும்
 முறையானே வைகுறுவும் விடியலும் மருதத்திணைக்குச் சிறந்தன ஆதலும்,
 எற்பாடு நெய்தல்திணைக்குச் சிறந்தது ஆதலும் பொருந்தும் என்று கூறுவர்
 அகப்பொருள் இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு.