இது நிறுத்த முறையானே உரிப்பொருள் இத்துணைப் பகுதித்து
என்பதூஉம், அப்பகுதிகள்தாம் இன்னஇன்ன திணைக்கு உரிய
என்பதூஉம் உணர்த்துகின்றது.
இ-ள் : புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின்
நிமித்தமும் எனமேல் கூறிப்போந்த உரிப்பொருள் பத்துவகையினை
உடைத்தாம்; அவைதாம் முறையானே இரண்டிரண்டு முற்கூறிய
ஐந்திணைக்கும் சிறந்தனவாம் என்று கூறுவர் பாடல் சான்ற புலனெறி
வழக்கினை அறிந்தோர் என்றவாறு.
அகப்பொருளாவது புணர்ச்சி ஆகலானும் அஃது இருவர்க்கும்
ஒப்பநிகழ்தலானும் முன்னர்ப்புணர்ச்சியும், புணர்ந்துழிஅல்லது பிரிவு
இன்மையானும் அது தலைவன்கண்ணதாகிய சிறப்பானும் அதன் பின்னர்
பிரிவும், பிரிந்துழிக் கற்பால் தலைவி ஆற்றியிருத்தல் வேண்டுதலின் அதன்
பின்னர் இருத்தலும், பிரிவின்திறனாகிய பரத்தையிற் பிரிந்துழித் தலைவன்
தவறு நோக்கித் தலைவி கலாய்த்தல் இயல்பு ஆகலானும் காமத்திற்குச்
சிறத்தலானும் அதன் பின்னர் ஊடலும், ஏனைப் பிரிவு நீட்டித்துழிக் காமம்
கைம்மிக்கு அழுங்கல் இயல்பாகலின் அதன்பின்னர் இரங்கலும்
வைக்கப்பட்டன.