140                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

பாடலும் ஊடலும் உணர்த்தலும் உள்ளிட்ட இன்ப விளையாட்டு
 இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவன் ஆகிய
 இந்திரனும், முதற்பொருள் பற்றித் தோன்றும் ஏனைய கருப்பொருளும்,
 ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளும், ஒன்றற்கு ஒன்று
 பொருத்தம் உடையவாய் மருதத்திணையைச் சிறப்பித்து நிற்றலின் அவை
 அதற்குச் சிறந்தன என்பதூஉம்;

    கடலும் கடல் சார்ந்த இடனும் ஆகிய நிலனும், வெஞ்சுடர் வெப்பம்
 தீரத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நிழல் செய்யவும், தண்பதம்பட்ட
 தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை
 நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவின் நாற்றம் முன் நின்று
 கஞற்றவும், நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும், காதல்
 கைம்மிக்குக் கடற்கானிலும் கானற்கானினும் தன் நிறை கடந்து வேட்கை
 புலப்பட உரைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கல்
 பொருள் சிறத்தலான் எற்பாடாகிய சிறுபொழுதும், பெரும்பொழுது ஆறும்
 என்னும் காலமாகிய முதற்பொருளும்,

    அந்நிலத்து வாழும் நுளையர்க்கு வலைவளம் தப்பின் ஆண்டு வாழும்
 மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கொடி நாட்டிப் (கோடுநட்டு) பரவுக்கடன்
 கொடுத்தலின் ஆண்டு வெளிப்படும் வருணனும், முதற்பொருள் பற்றித்
 தோன்றும் ஏனைக்கருப்பொருளும்,

    இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளும், ஒன்றற்கு
 ஒன்று பொருத்தம் உடையவாய் நெய்தல் திணையைச் சிறப்பித்து நிற்றலின்
 அவை அதற்குச் சிறந்தன என்பதூஉம் ஆயின என்க.