கல்போல் பிரியலம் என்ற சொல்தான்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்
நிழல்தேய்ந்து உலறிய மரத்த அறைகாய்பு
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம்அறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச்
சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
நார்இல் முருங்கை நவிரல் வான்பூச்
சூரல்அம் கடுவளி எடுப்ப ஆர்உற்று
உடைதிரைப் பிதிர்வில் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல காடுஇறந் தோரே அகநா. 1