144                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    தாழை தளரத் தூங்கி மாலை
    அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்
    காமர் நெஞ்சம் கைஅறுபு இனையத்
    துயரம் செய்துநம் அருளார் ஆயினும்
    அறாஅ லியரோ அவருடைக் கேண்மை
    அளியின் மையின் அவண்உறைவு முனைஇ
    வாரற்க தில்ல தோழி கழனி
    வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
    தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
    செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை
    அகமடல் சேக்கும் துறைவன்
    இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே               அகநா. 40

    இது தலைவன் பொருட்பிரிவிடைத் தலைவி தோழிக்கு உரைத்தது;
 இக்களிற்றியானை நிரையுள்ளும் முறையானே குறிஞ்சி முதலிய
 ஐந்திணைக்கும் முதலும் கருவும் வந்து உரிப்பொருளால் சிறப்பு எய்தி
 முடிந்தவாறு காண்க.

 பிறவும் அன்ன.

    நறைபரந்த சாந்தம் அறஎறிந்து நாளால்
    உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல்-பிறைஎதிர்ந்த
    தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
    ஏமரை போந்தன ஈண்டு. (திணைமாலை-1)

   இது மதிஉடம்படுத்தது; முதற்பொருள்இன்றி வந்த குறிஞ்சி.

    முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
    மலையன் ஒள்வேல் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந் தனளே.

   இது நாண நாட்டம்; முதலும் கருவும்இன்றி வந்த குறிஞ்சி.