அகத்திணையியல்-நூற்பா-21                               153


 

     "அங்கண் மதியம்" என்ற பாடல்:

     "மதியம் பாம்பால் மறைக்கப்பட்டதைக் கண்டு சான்றோர்
 வருந்துவதுபோல, நாம் தனிப்படர் உழக்கும் மனைக்கண் கலங்கி அயலாரும்
 நோவவும், நலனுண்ட சேர்ப்பன் ஒருவனே நம்மைப்பற்றி நோதல் இன்றி
 உள்ளான்" என்ற இப்பாடலில், "ஏதில்மாக்களும் நோவர்" எனத் தலைவியின்
 நிலைகுறித்துப் பிறரும் இரங்கத்தக்க இரக்கமாகிய உரிப்பொருளும், நெய்தல்
 நிலத்தலைவன் பெயராகிய சேர்ப்பன் என்ற கருப்பொருளும்வர,
 முதற்பொருள் வாராமை காண்க.

     இவற்றால், ஒவ்வொரு பாடற்கண்ணும் முதல்கருஉரி என்ற
 திணைக்குரிய முப்பொருளும் வருதல்வேண்டும் என்ற வரையறை இன்று
 என்பது உணரப்படும்.

ஒத்த நூற்பாக்கள்

     "புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
     ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
     தேருங் காலைத் திணைக்குஉரிப் பொருளே."
                                    தொல். பொ. 14, மு, வீ. அக. 40

     "புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
     இரங்கலும் இவற்றின் நிமித்தமும் என ஆங்கு
     எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே"              ந. அ. 25

     "புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
     அனைவயின் இரங்கலும் அவற்றின் நிமித்தமும்
     களவொடு கற்பெனக் கவைநர் கூறிய
     அளவின் உரிப்பொருள் ஆகும் என்மனார்".       த. நெ. வி. 13

     "குடவரைக் குறிஞ்சியும் குணகடல் நெய்தலும்
     கடவது ஆகும் களவிற்கு உரித்தே,"              மு. வீ. அக. 41

     "நன்னில மருதமும் தொன்னில முல்லையும்
     துன்னருங் கற்பொடு தோன்றும் தொடர்ந்தே"     மு. வீ. அக. 42

     20