கையறு புலம்பும் கலவியும் தலைதரும்
நெய்தல் நடையியல் நேருங் காலைக்
கடலும் கழியும் கைதையும் கானலும்
மடல்இரும் பெண்ணையும் வான்சிறைப் புள்ளும்
கழுமிய இருளும் கதிர்ஒளி மதியும்
பொழுதும் காற்றும் என்றிவை முதலாம்
எவ்வகைப் பொருளும் இரந்துகுறை உறுதலும்
அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தலும்
விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறலும்
இரவுக்குறி நேர்தலும் பகற்குறி மறுத்தலும்
இரவிடம் காட்டலும் பகலிடம் காட்டலும்
வரவுஅறி வுறுத்தலும் வான்துயில் கோடலும்
இறைவனைத் தோளியை இன்துயில் எடுப்பலும்
துறைவனின் துயில்எழீ்இத் துன்னுதல் பொருட்டால்
ஏதில கூறலும் இடத்துய்த்து அகற்றலும்
மேதகு கிளவியின் மீண்டுஎதிர் கோடலும்
சிறப்புறக் கிளத்தலும்
அம்பலும் அலரும் ஆயின என்றலும்
வம்பலர் தாரோய் வருந்தினள் என்றலும்
குறிவழிப் படுத்தலும் கொண்கன் தோன்றலும்
அறியக் கூறலும் அருங்காப்பு மிகுதலும்
தாம்பிழைப்பு இன்மையும் தவச்செலவு அருமையும்
வன்பழிக்கு அஞ்சலும் வாரலை என்றலும்
இரவுவரல் என்றலும் பகல்வரல் என்றலும்
இரவும் பகலும் வாரல் என்றலும்
அவ்விரு பொழுதும் ஆய்ந்துவரல் என்றலும்