இத்துணையும் ஐந்திணைபற்றி வீரசோழிய உரைவிளம்புவன.
இனி, இவ்வைந்திணைக் கருப்பொருள்பற்றித் தொல்காப்பியப்
பொருட்படல 20ஆம் நூற்பா உரையில் உரையாசிரியர் கூறுவன:
குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள். மைவரை உலகமும் கூதிர்க்காலமும்
அதனிடை நள்ளிருளும் கூறினமையான், அந்நிலத்தினும் காலத்தினும் நிகழ்
பவை கொள்க. உணவு-தினையும் ஐவனமும் வெதிர்நெல்லும். மா-யானையும்
புலியும் பன்றியும் கரடியும். மரம்-வேங்கையும் கோங்கும். புள்-மயிலும்
கிளியும், பறை-வெறியாட்டுப்பறையும் தொண்டகப்பறையும். செய்தி-தேன்
அழித்தல். பண்-குறிஞ்சி "பிறவும்" என்றதனால், பூ-வேங்கைப் பூவும் காந்தட்
பூவும் குறிஞ்சிப் பூவும்; நீர் சுனை நீரும் அருவி நீரும். பிறவும் அன்ன.
பாலைக்குத் தெய்வம் கொற்றவை. உணவு-ஆறலைத்தலான் வரும்
பொருள், விளைபொருள் இன்மையான். மா-வலி அழிந்த யானையும், வலி
அழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம்-பாலை, இருப்பை, கள்ளி,
சூரை. புள்-எருவையும் பருந்தும். பறை-ஆறலைப் பறையும் சூறை கொண்ட
பறையும். செய்தி-ஆறலைத்தல். பண்-பாலை. "பிறவும்" என்றதனால், பூ-
மராம்பூ; நீர்-அறுநீர்க் கூவலும் அறுநீர்ச்சுனையும். பிறவும் இந்நிகரன
கொள்க.