அகத்திணையியல்-நூற்பா-21                               163


 

     மருதத்திற்குத் தெய்வம் இந்திரன், "தீம்புனல் உலகம்" (தொல்.பொ.5)
 எனவும் "வைகறைவிடியல்" (தொ.பொ.9) எனவும் ஓதினமையால்,
 அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு-நெல்.
 மா-எருமையும் நீர் நாயும். மரம்-மருதும் காஞ்சியும். புள்-அன்னமும்
 அன்றிலும். பறை-நெல்லரி பறை. செய்தி-உழவு. பண்-மருதம். "பிறவும்"
 என்றதனால், பூ-தாமரையும் கழுநீரும்; நீர்-ஆற்று நீரும் பொய்கைநீரும்.
 பிறவும் அன்ன.

     முல்லைக்குத் தெய்வம் கண்ணன். "காடுறை உலகம்" (தொல்.பொ.5)
 என்றதனானும் "காரும் மாலையும் முல்லை" (தொல்.பொ.6) என்றதனானும்,
 காட்டினும் கார்காலத்தினும் மாலைப்பொழுதினும் நிகழ்பவை கொள்க.
 உணவு-வரகும் முதிரையும். மா-மானும் முயலும். மரம்-கொன்றையும்
 குருந்தும் புதலும். புள்-கானாங்கோழி. பறை-ஏறுகோட்பறை. செய்தி-
 நிரைமேய்த்தல். யாழின்பகுதி என்பது பண்; அது சாதாரி. "பிறவும்"
 என்றதனால். பூ முல்லையும் பிடவும் தளவும்; நீர்-கான்யாறு. பிறவும்
 இந்நிகரன கொள்க.

     உரையாசிரியர் தொல்காப்பியப் பொருட்படல 23, 24ஆம்
 நூற்பாக்களில் நிலமக்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்:

     குறிஞ்சிக்கு மக்கட்பெயர் குறவன், குறத்தி என்பன; தலைமக்கள் பெயர்
 மலைநாடன், வெற்பன் என்பன.

     பாலைக்கு மக்கள் பெயர் எயினர், எயிற்றியர் என்பன; தலைமக்கள்
 பெயர் மீளி, விடலை என்பன.

     முல்லைக்கு மக்கள் பெயர் பொதுவன், ஆயன் என்பன; தலைமக்கள்
 பெயர் குறும்பொறைநாடன் என்பது போல்வன.

     மருதத்திற்கு மக்கள்பெயர் உழவர்உழத்தியர் என்பன; தலைமக்கள்
 பெயர் ஊரன், மகிழ்நன் என்பன.