மங்குல் மாமழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப்
புள்ளிநுண் துவலை பூஅகம் நிறையக்
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணில் கருவிளை மலரத்
துய்த்தலைப் பூவின் புதல்இவர் ஈங்கை
நெய்த்தோய்த் தன்ன நீர்நனை அந்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்சச்
கிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம்நோய் அறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழிஎன் தனிமை யானே. (அகநா. 294)