அகத்திணையியல்-நூற்பா-22                               175


 

 மிகுந்துவிடும்" என்று கருதிப் பனியோடு கூடிய இருள் சூழ்ந்து
 வருகையினாலே, கலங்கிய தனியவர் வருத்தம் கண்டு நீ வருந்துகின்றாயா?
 அல்லது முன்பு இனியசெய்து, பின் நீங்கினாரை எம்மைப்போல நீயும்
 உடையையாய் வருந்துகிறாயா?" என்ற தலைவி கூற்றாக அமைந்துள்ள
 நெய்தற்கலியில், நெய்தற்குரிய எற்பாடு வாராமல், "இடும்பைகூர்
 மருள்மாலை" "பனி இருள்" என மாலையும் இருளும் முன் பனியும்
 மயங்கிவந்தன.

     "கண்டிகும் அல்லமோ"-

     "நெய்தல் நிலத்தலைவனே! நின் உறவினள் தன் அணிகலன் மணலில்
 வீழ்ந்து மறைந்ததாக, அதுகுறித்து வெள்ளாங்குருகுடன் உசாவிக்
 கொண்டிருக்கிறாள்" என்ற தலைவி கூற்றாகிய நெய்தல் குறுநூற்றுள்
 முதற்பொருளும் தலைமகன் பெயரும் நெய்தல் திணைஆயினும், தலைவி
 தலைவனொடு ஊடுதலை உரிப்பொருளாகக் கொண்ட மருதம் மயங்கியவாறு.

     எடுத்துக்காட்டுக்கள் யாவும் பெரும்பாலும் நச்சினார்க்கினியர்
 தொல்காப்பியப் பொருட்படல 12-ஆம் நூற்பா உரையுள் சொற்றனவே.

ஒத்த நூற்பாக்கள்

     "திணைமயக்கு உறுதலும் கடிநிலை இலவே
     நிலன்ஒருங்கு மயங்குதல் இன்றுஎன மொழிப
     புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே".          தொல். பொ. 12

     "இருதிணைத் தொழிலும் இயன்று தம்முள்
     ஒருதிணைக்கு ஓதல் ஒழிந்தன இயல்பே".           வீ. உரை. 96

     முழுதும்                                          ந. அ. 251

                                                            (22)