178                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 நாணமும் என் வயத்த அன்றி நீங்கப் பிறர் என்னை ஏளனம் செய்யுமாறு
 விடுத்து, மின்னலைப் போலவும் கனவினைப் போலவும் தன் மெய் நலன்
 காட்டி என் உள்ளம் கவர்ந்து மறைந்த கள்வியை அடைவதற்காக, அழகிய
 நீலப் பீலி சூட்டிய மடல் மாவிலே பூளைப் பூவையும் ஆவிரம் பூவையும்
 எருக்கம் பூவொடு தொடுத்துக் கட்டி ஊர்த்தெருவில் யான்பாடும் பாட்டை
 எல்லீரும் கேளுங்கள்" என்று தலைவன மடலேறுதல் கூறும் பெருந்திணை,
 அகத்திணையுள் நெய்தல் திணையின்பாற்பட்டவாறு.

ஒத்த நூற்பா

     "உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே"  தொல்.பொ. 13. நச்.
                                                             23

     

கைகோள் வகை

 396 அளவுஇல் இன்பத்து ஐந்திணை மருங்கின்
     களவுகற்பு எனஇரு கைகோள் வழங்கும்.

     இது மேல் கூறிப்போந்த ஐந்திணைக்கு உரிய கைகோள் வரையறை
 கூறுகின்றது.

     இ-ள் ;வரம்பு இல் இன்பத்தை உடைய ஐந்திணை இடத்துக் களவும்
 கற்பும் என இரண்டு ஒழுக்கம் நிகழும் என்றவாறு.                   24

     

விளக்கம் 

கைகோள்-ஒழுக்கத்தைக் கொள்ளுதல்.

     களவிற்குக் குறிஞ்சியும் நெய்தலும் சிறந்தன; கற்பிற்கு முல்லையும்
 மருதமும் சிறந்தன. இச்செய்தி.

     "குடவரைக் குறிஞ்சியும் குணகடல் நெய்தலும்
     கடவ தாகும் களவின்நீர் மைக்கே".              மு. வீ. அக. 41