இஃது ஆசுரமும் இராக்கதமும் பைசாசமும் ஆகிய சிறப்பில்லாக்
கைக்கிளை போலன்றிக் காமஞ்சாலா இளமையோள் வயின் கைக்கிளை
போலச் சிறந்தகாமம் சான்ற இளமையோள் வயின் கைக்கிளை இன்னுழி
நிகழும் என்கின்றது.
இ-ள் : பொருள்படு கிளைநரம்பினைப் பொருந்திய யாழினை உடைய
கந்தருவர் விரும்பும் இயற்கைப்புணர்ச்சி முன் காட்சிமுதலாக மேல்
கூறப்படும் நால்வகைக் குறிப்பிற்று ஆகிய கைக்கிளை நற்காமத்திற்கு
இன்றியமையாமையின் வருதல் முறைமை என்றவாறு.
இது, தலைவி வேட்கைக்குறிப்பு தன்மேல் நிகழ்வதனைத் தலைவன்
அறிவதற்கு முன்னே, தன் காதல் மிகுதியால் கூறும் கூற்றது ஆகலின்
கைக்கிளை ஆயிற்று. இது தலைமகற்கே உரியது என்பது
"மடமான் நோக்கி" (117) என்னும் சூத்திரத்துக் கூறுதும்.
இவை, புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சித்திணை ஆகாவோ எனின்,
காட்சிப்பின் தோன்றிய ஐயமும் துணிவும் குறிப்புஅறிதலும் நன்று எனக்
கோடற்கும் அன்று எனக்கோடற்கும் பொது ஆகலின், அவை ஒருதலையாக
நிமித்தம் ஆகா. வழிநிலைக்காட்சியே நிமித்தமாம் என்று உணர்க. 26