மேற்கூறிய இருகூற்றுப் புணர்ச்சியுள் இஃது உள்ளப் புணர்ச்சி முன்
நிகழ்தற்கு ஏது கூறுகின்றது.
இ-ள் : நிகர்இல்லாத தலைமகற்குப் பெருமையும் உரனும் நன்னுதலை
உடையள் ஆகிய தலைமகட்கு அச்சமும் நாணும் மடனும் நிலைபெற்ற
குணங்கள் ஆதலின், மேல் கூறிப்போந்த இருகூற்றுப் புணர்ச்சியுள்ளும்
உள்ளப் புணர்ச்சி முன் நிகழ்வதற்கு உரித்தாம் என்றவாறு.