இ-ள் ; காண்டலும், பெறல்வேண்டும் என்னும்உள்ள நிகழ்ச்சியும்,
இடைவிடாது, நினைத்தலும், அங்ஙனம் நினைத்தல் காரணமாக உடம்பு
வாடுதலும், வாடியபின் தன்நெஞ்சின் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு
உரைத்தலும், நாணத்தின் எல்லையைக் கடத்தலும், தன்னால் காணப்பட்டன
எல்லாம் தான்கண்ட உறுப்புப் போலுதலும், பித்தாதலும், மோகித்தலும்,
இறந்துபடுதலும், எனக் கூறப்பட்ட பத்து அவத்தையும் ஒருங்கு நிகழும்
அளவாயின் தலைமகனும், புகுமுகம்புரிதல் முதலியனவாகிக் காட்சி முதலிய
மூன்று அவத்தையினையும் பற்றி ஒரோ அவத்தைக்கு நந்நான்காய்
ஆட்சியான் அமைவு பெற்ற பன்னிரண்டு மெய்ப்பாடும் தலைமகளும்
பொருந்துதல் உற்றாலே, அவ்விருவருக்கும் மெய்யுறு புணர்ச்சி பொருந்து
தற்கு உரித்தாம் என்றவாறு.
நான்காம் அவத்தை தொடங்கி ஆறாம் அவத்தைகாறும் பற்றி வரும்
பாராட்டுஎடுத்தல் முதலாகக் கையறவு உரைத்தல் ஈறாகக் கிடந்த
பன்னிரண்டு மெய்ப்பாடும் புணர்ச்சிப் பின்னர் நிகழ்வன ஆகலானும்,
ஏழாம் அவத்தை தொடங்கிப் பத்தாம் அவத்தைகாறும் பற்றி வரும் மெய்ப்
பாடு எல்லாம் அகன் ஐந்திணைக்கு ஆகாது பெருந்திணைப்பாற்படுவன
ஆகலானும், புகுமுகம் புரிதல் முதலிய பன்னிரண்டு மெய்ப்பாடுமே
ஈண்டைக்கு இயைவன என்பார் "ஆட்சியின் அமைந்த" என்றார்.
வரலாறு: