188                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 இஃது ஒருதலை உள்ளுதற்கும்,

    "ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
     வண்டுஇமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
     உரவுக்கடல் ஒலிதிரை போல
     இரவி னானும் துயில்அறி யேனே."                  ஐங்குறு. 172

 இஃது ஆக்கம் செப்புதற்கும்,

    "காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
     யானோ பொறேன்இவ் விரண்டு".                    குறள் 1247

 இது நாணுவரை இறத்தற்கும்,

    "ஒங்குஎழில் கொம்பர் நடுஇதுஎனப் புல்லும்
     காந்தட்கு இவரும் கருவிளம் பூக்கொள்ளும்
     மாந்தளிர்க் கையில் தடவரும் மாமயில்
     பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும்
     தோள்எனச் சென்று துளங்குஒளி வேய்தொடும்
     நீள்கதுப்பு இஃதுஎன நீர்அற லுள்புகும்".
                                         உரை.மேற். தொல். பொ.97

 என்றாற் போல்வன எல்லாம் நோக்குவ எல்லாம் அவையே போறற்கும்
 உதாரணமாம். பிறவும் வந்தவழிக் காண்க. புகுமுகம் புரிதல்
 முதலியவற்றிற்குப் பொருளும் உதாரணமும் மெய்ப்பாடு கூறும்வழிப்
 பெறப்படும். அவை ஆண்டு உணர்க.

   இனி, இவற்றின்வழித் தோன்றும் மெய்யுறு புணர்ச்சிக்கு உதாரணம்:

    கோடல் எதிர்முகை பசுவீ முல்லை
     நாறுஇதழ்க் குவளையோடு இடைஇடுபு விரைஇ
     ஐதுதொடை மாண்ட கோதை போல
     நறிய நல்லோள் மேனி
     முறியினும் வாயது முயங்கற்கும் இனிதே.              (குறுந். 62)

 எனவரும்.                                                    33