அகத்திணையியல்-நூற்பா-33                               189


 

விளக்கம்

 மோகித்தல் - மயங்கல். சாக்காடு - மடலேறுதல், வரைபாய்தல்.
 தலைவனுக்குப் பத்து அவத்தையும் நிகழ்தல் வேண்டும். தலைவிக்குக் காட்சி
 வேட்கை உள்ளுதல் என்ற மூன்று அவத்தையே புணர்ச்சிக்குமுன் நிகழ்தல்
 வேண்டும். தலைவிக்கு நான்காம் அவத்தை முதல் ஆறாம் அவத்தை காறும்
 புணர்ச்சிக்குப் பின் நிகழும். ஏழாம் அவத்தை தொடங்கி நிகழ்வன, தலைவி
 மன்றத்து இருந்த சான்றவர் அறியத் தன்துணைவன் பெயரும் பெற்றியும்
 பிறவும் கூறியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலியவற்றொடு
 கூறத்தகாதன கூறுதல் ஆகிய "தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்" (219)
 ஆகிய பெருந்திணைச்செய்தி ஆதலின், அகன்ஐந்திணைக்கு அந்நான்கு
 அவத்தைகளும் தலைவிபால் நிகழா என்பது.

     முதல்அவத்தை - புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம்
 மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை என்பன.

     இரண்டாம் அவத்தை - கூழை விரித்தல், காதுஒன்று களைதல்,
 ஊழ்அணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பன.

     மூன்றாம் அவத்தை - அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்,
 இல்வலி உறுத்தல், இருகையும் எடுத்தல் என்பன.

     "உள்ளிக்காண்பென்"-

     "முள்போன்ற பற்கள், அமிழ்தம் ஊறும் செவ்வாய், அகிலும் ஆரமும்
 நாறும் அறல்போன்ற கூந்தல், மழைக்கண் இவற்றைஉடைய தலைமகளின்
 முறுவலையும் அன்புப்பார் வையையும் நினைக்குந் தொறும் மகிழ்வேன்"
 என்று தலைமகன் தலைமகளை இடைவிடாது நினைத்தவாறு.