அகத்திணையியல்-நூற்பா-33,34                            191


 

     எடுத்துக்காட்டுக்கள் உரையாசிரியரைப் பின்பற்றிச் சொற்றவை.
 (தொல். பொ. 97 உரை)

ஒத்த நூற்பாக்கள்

     "வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
     ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
     நோக்குவ எல்லாம் அவையே போறல்
     மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச்
     சிறப்புடை மரபினவை களவுஎன மொழிப"                                        தொல்.பொ.100 மு. வீ. கள. 5
     "காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்
     காட்டிய பத்தும் கைவரும் எனினே
     மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே".              ந. அ. 36

33

 குறிகள்

 406 பகற்குறி இரவுக் குறியெனும் பான்மைய
     புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சிநிகழ் இடன்அவற்று
     இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
     இல்வரை இகவா இயல்பிற்று ஆகும்.

     இது, மேல் கூறிப்போந்த புணர்ச்சி நிகழும் இடம் இத்துணைப்
 பகுதித்து எனவும், அப்பகுதிகள் இவ்வியல்பின எனவும் கூறுகின்றது.

     இ-ள் : பகற்குறியும் இரவுக்குறியும் என்னும் பகுதியை உடையவாம்,
 அன்பான் அமைந்தோர் புணர்ச்சி நிகழும் இடங்கள். அவற்றுள், இல்லின்
 எல்லையைக் கடந்தது பகற்குறியாம்; இரவுக்குறி அதனைக் கடவாத
 இயல்பினை உடைத்தாம் என்றவாறு.