அவற்றுள், ஒருவழித்தணத்தலாவது ஓர்ஊரின்கண்ணும் ஒரு நாட்டின் கண்ணும் பிரிதல்; வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலாவது காடு இடையிட்டும் நாடு இடையிட்டும் பிரிதல். 35
விளக்கம்
இவ்விருவகைப் பிரிவுகளையும் தொல்காப்பியனார் "இட்டுப் பிரிதல்" எனவும், "அருமை செய்து அயர்த்தல்" எனவும் கூறுவர்.
ஒத்த நூற்பாக்கள்
"முந்நாள் அல்லது துணையின்று கழியாது அந்நாள் அகத்தும் அதுவரைவு இன்றே". தொல். பொ. 122 "களவினுள் தவிர்ச்சி காப்புமிகின் உரித்தே வரைவுஇடை வைத்த காலை யான". இறை. கள. 16 முழுதும். ந. அ. 39
35
ஒருவழித் தணத்தல்
அவற்றுள்,
408 ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்
இஃது அப்பிரிவு இரண்டனுள் காலவரையறை கூறப்படாதது இது என்கின்றது.
இ-ள் மேல்கூறிய பிரிவு இரண்டனுள் ஒருவழித்தணத்தல் காடு இடையிட்டும் நாடு இடையிட்டும் பிரியப் படாமையின் அதற்குக் காலவரையறை சொல்லார் ஆசிரியர் என்றவாறு. 36