அகத்திணையியல்-நூற்பா-45                               199


 

     இது தலைவி அறத்தொடு நிற்கும் காலம் உணர்த்துகின்றது.

     இ-ள் பாங்கியிற்கூட்டம் ஆகியஒன்று நீங்கியஏனை இயற்கைப்
 புணர்ச்சி முதலாய மூன்று புணர்ச்சிக்கண்ணும் தலைவன்
 ஒருவழித்தணத்தலானும், வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலானும்,
 தலைவனைச் செவிலி குறியிடத்துக் காண்டலானும், மனையிடத்துச்
 செறித்தலானும் தனக்கு வருத்தம் மிகுமாயின், தன்னைப் பாங்கி வினவிய
 இடத்தும் வினவாத இடத்தும் தலைவி அவட்கு அறத்தொடு நிற்கும்
 என்றவாறு. பாங்கி என்பது அதிகாரத்தான் வந்தது.                   45

ஒத்த நூற்பாக்கள்

     "வரைவுஇடை வைத்த காலத்து வருந்தினும்
     வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
     உரைஎனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்
     தானே கூறும் காலமும் உளவே".                தொல். பொ. 112

     "பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்
     நன்னயம் மருங்கின் நாட்டம் வேண்டலின்
     துணைச்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
     துணையோர் கருமம் ஆக லான".                         "123

     "காமத் திணையின் கண்நின்று வரூஉம்
     நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
     குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
     நெறிப்பட வாரா அவள்வயி னான".                       "108

     "காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
     ஏமுற இரண்டும் உளவென மொழிப".                       109