"வயலைக்கொடியின்"-
வயலைக்கொடி போன்ற வாடிய இடுப்பினையும் வருந்துதலை
உடைய ஊர்ந்து செல்லுகின்ற நடையினையும் உடைய இளைய அந்தணன்
இரவுக்காலத்தில் வந்து வாயில்காவலனால் சொல்லிவிடாமல் நேரே
அரசனிடம் போய்க் கூறிய தூதுச்சொற்கள் சிலவற்றால் ஏணியும் கதவுகளில்
இடும்தாழும் நீக்கப்பட்டு யானைகள் மணி களையப்பட்டுப் போர் ஆயத்தம்
நிறுத்தப்பட்டது என்றவாறு.
"மடந்தாழும்"-
அறியாமை தங்கிய உள்ளத்தைஉடைய கம்சன் வஞ்சனையை
அழித்தவன், பாண்டவர்க்காகத் தன்பின்னர் வேதங்கள் முழங்கவும் உலகம்
துதிக்கவும் கவுரவர்பக்கல் தூது போனவன் ஆகிய திருமாலை ஏத்தி
"நாராயணா" என்று அவன் திருநாமம் கூறாத நா பயனுடைய நா அன்று
என்றவாறு.