"மணமலி"-
"கடற்கரையை நோக்கி வரும் மரக்கலங்களை நோக்கியவாறு
கல்லுருவில் தங்கியிருந்த கற்பினள் ஒருத்தி தன் கணவன் ஒரு
கலத்தில் வந்து சேர்ந்த அளவில் கல்லுருவை விடுத்துத் தொல்லுருவு
கொண்டாள் எனவே, அவள் கணவனோடு கடற்செலவில் உடன்
செல்லவில்லை என்பதாம்.
"பனியிருங் கங்குலும்"-
"என்தலைவி பனிமிக்க இரவைத் தனியளாய்க் கழித்தவாறே தன் ஊரில்
இருக்கவும், யான் பலரும் இரவில் துயிலும் பாசறையில் தனித்து
வருந்துகிறேன்" என்ற தலைவன் கூற்றில் தன் மனையாளோடு பாசறைக்குச்
செல்லாமை பெறப்பட்டவாறு.
"துயிலின்றி" -
"வெயில் ஒளி அறியாத சோலையிலே குயில் கூவும் இளவேனிற்
காலம் இது" என்று தலைவனிடம் கூறுவார் உளராயின், யாம் துயிலின்றி
யாமக் கடலை நீந்தவும், அவன் பரத்தையரொடு மடுக்களில் நீராடி
அவரைக் கூடி நம்மை மறந்து அவரிடமே தங்குவானோ?"" என்ற
தலைவி கூற்றைப் பாணன் பாசறைக்கண் சென்று தலைவனிடம் சொற்றவாறு.