கருவயிற்று உறூஉம் காலம் ஆதலின் பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன்.
இது பரத்தையின் பிரியும் தலைவற்கு உரியது ஓர் இயல்பு உணர்த்துகின்றது.
இ-ள் : நீராடியபின் பன்னிருநாளும் கரு வயிற்றின் கண் படும்காலம் ஆதலான், பரத்தையின் பிரியும் தலைவன் அப்பன்னிருநாளும் தலைவியைப் பிரியப் பெறான், பூப்பு நிகழும்
காலத்து என்றவாறு.
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீர் ஆடியபின் ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறி வாளர் துணிபு. (ஆசாரக்கோவை 42)
என்றார் பெருவாயில் முள்ளியாரும் என்க. 87
விளக்கம்
பூப்புப் புறப்பட்டஞான்று நின்றகரு வயிற்றில் அழியும்; இரண்டாம்நாள் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நின்ற கரு குறுவாழ்க்கைத்தாம்; வாழினும் திருவின்றாம்; ஆதலின் கூட்டம் தக்கதன்று என்பது. இறை. கள. 43 உரை
ஒத்த நூற்பாக்கள்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் பரத்தையின் பிரியும் காலை யான." தொல். பொ. 187
"பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உறைதல் அறத்தாறு அன்றே." இறை. கள. 43