232                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     பரத்தையைப் பழித்தற்குச் செய்யுள்:

     முருகார் முளரியும் முள்ளியும் முண்டக மூரிஅரம்
     பொருகார் இரும்பும் கனகமும் பொன்பொங்கு தாரகையும்
     குருகார் குறுங்கழிக் கெண்டையும் நேர்எம் குரிசிலுக்கு
     வருகாதல் நல்கிய எங்கையும் யானும் மடந்தையரே.   (அம்பி 481)

 எனவும் வரும்.

     ஏனையவற்றிற்கு உதாரணம் மேல் வந்துழிக் காண்க.              90

விளக்கம்

     தலைவி தான் பூப்பு எய்திய செயலைச் செவ்வணி அணிந்த சேடி
 வாயிலாகத் தலைவனுக்கு உணர்த்தலும், உடனே தலைவன் பிரிந்துவிடுவான்
 ஆதலின் அதனைப்பொறாது பழிக்கும் காமக்  கிழத்தியைப் பழித்தலும்,
 பரத்தைமை கொண்ட கிழவனை இடித்து உரைத்தலும், தலைவன் பின்னர்
 வரைந்த தலைவியை அவனோடு எதிர்கொண்டு அழைத்தலும், அவளொடும்
 தோழியரொடும் சேர்ந்துகொண்டு பரத்தையைப் பழித்தலும், தலைவனோடு
 ஊருக்கு வெளியே புறப்பட்டு  மலர்ச்சோலைகள் தோட்டங்கள் வயல்கள்
 அருவிகள் மலைகள் காடுகள் இவற்றைக் கண்டு விளையாடலும் ஆறும்
 ஓடையும் குளனும் ஆடி விளையாடலும் கற்புக்காலத்தில் தலைவிக்கு
 நிகழ்வனவாம் என்றவாறு.

     "அடங்கா அசுரர்" -

     பகைவரை அழித்துச் சக்கரப்படை ஏந்திய அத்தி ஊரர் ஆகிய
 வரதர்நாட்டிலே தன் மைந்தனையும் அழைத்துக் கொண்டு வீட்டை
 விடுத்துத் தலைவி தலைவனுடன் போய்க்காவும் யாறும் குளனும் ஆடத்தக்க
 பருவம் வந்தது என்றவாறு.