236                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 கூத்தன் தொழில்கள்

 465 செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
     கலன்அணிபு உணர்த்தலும் காமநுகர்பு உணர்த்தலும்
     புலவிமுதிர் காலைப் புலம்கொள ஏதுவின்
     தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
     மேல்சென்று உரைத்தலும் மீண்டுவரவு உரைத்தலும்
     கூற்றுஅரு மரபின் கூத்தற்கு உரிய.

     இது கூத்தற்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் செல்வம் வாழ்த்தல் முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம்
 கூத்தற்கு உரியனவாம் என்றவாறு.                                93

விளக்கம்

     தலைவனுடைய செல்வத்தை வாழ்த்தலும், இல்லறத்தை இனிது
 நடத்தற்குரிய வாய்ப்புக்களைக் கூறலும், அணிகலன்களை நலனுற அணியும்
 முறைமைகளை உணர்த்தலும், இன்பம் துய்க்கும் வாய்ப்புக்களை விளக்கலும்,
 தலைவிக்கு ஊடல் ஏற்படுங்காலை அவள் புலவி தீர்ந்து தலைவனோடு
 கூடும் வகையில் காரணங்கள் பல காட்டி அவள் உள்ளத்தைத்
 தெளிவித்தலும், தலைவன் பிரியக் கருதுங்காலை அவன் செல்ல இருக்கும்
 தேயத்தின் சேய்மைபற்றிக் கூறலும், தலைவன் போர்வயின் பிரிந்தகாலைத்
 தலைவி நிலையை அவன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்று உணர்த்தலும்,
 தலைவன் மீண்டு வரும் நாளைத் தலைவிக்கு உணர்த்தலும் கூத்தன்
 தொழில்களாம்.

        "தொல்லவை உரைத்தலும் ..... ..... ..... கூத்தர்மேன".
                                                 தொல். பொ. 168

     முழுதும்-                                           ந. அ. 97
                                                             93