466 மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத் தலும்அவள் ஊடல் தீர்த்தலும்
கொற்றவற் காத்தலும் குற்றேவல் செய்தலும்
சென்றுமுன் வரவு செப்பலும் பாசறை
ஒன்றிநின்று உரைத்தலும் வினைமுடிபு உரைத்தலும்
வழிஇயல்பு கூறலும் வழியிடைக் கண்டன
மொழிதலும் இளையோர் தொழில்என மொழிப.
இஃது இளையோர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் மடந்தையை வாயில்வேண்டல் முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் இளையோர்க்கு உரிய தொழில்களாம் எனக் கூறுவர் என்றவாறு. 94
தலைவன் பரத்தையிற் பிரிந்தவழித் தலைவியை வாயில் வேண்டலும், தலைவியைத் தலைவன் ஏற்றுக்கோடற்கு உடன்படச் செய்தலும், மீண்டும் ஊடல் நிகழாதவாறு அமைதி உறச்செய்தலும், தலைவனை உடன்இருந்து காத்தலும், அவற்குக் குற்றேவல் செய்தலும், தலைவன் பகைவயின் பிரிவு முதலியவற்றிலிருந்து மீண்டு வரும்முன் தாம் வந்து அவன் வரும் நாளினைத் தலைவியிடம் கூறலும், அவன் செய்த செயற்கருஞ் செயல்களை அவன்பக்கல் நின்று தலைவிக்கு உரைத்தலும், எடுத்துக்கொண்ட வினையின் வெற்றி முடிபை உணர்த்தலும் அவன் மீண்டு வரும் வழி இயல்பினையும் அல்வழியில் தாம் கண்டனவற்றையும் கூறுதலும் இளையோர் தொழில்களாம் என்றவாறு.
|
|
|
|