246                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இ-ள் காதல் பரத்தையைப் புகழ்தலும் தம்மை இகழ்தலும்
 தம்முள்ளேயும் கூறுவர் பரத்தையர் என்றவாறு.

     பரத்தையர் காதல் பரத்தையைப் புகழ்ந்து தம்மை இகழ்தற்குச் செய்யுள்:

  "திணைகாணும் நன்னிதி அன்னானைத் தன்வசம் செய்தவஞ்சி
  துணைகாணும் மாமுலைத் தோற்றங்கண்டீர்அந்தத் தோன்றலம்பொன்
  பணைகாணும் திண்புயம் புல்லாது வீணில் பருத்தகொங்கை
  இணைகாள் உமக்கிந்த மேம்பா டுறுவ(து) இயல்பல்லவே.

 எனவரும்.                                                   103

விளக்கம்

     "திணைகாணும்"-

     "தன் தனங்களால் தலைவனைத் தன்பக்கல் கவர்ச்சி செய்த காதல்
 பரத்தையின் தனங்களைக்கண்டும், அவன் மார்பினைக் கைப்பற்றித் தழுவும்
 ஆற்றல் அற்ற என் கொங்கைகளே! உமக்குக் கச்சினாலும்
 அணிகலன்களாலும் சிறப்புச் செய்து வைத்தேமாக அந்நலன்களால் நீயிர்
 மேம்படுவது தக்கதன்று" என்று சேரிப்பரத்தை தன் கொங்கைகளைப்
 பழித்தவாறு.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும். -                                         ந அ. 107

103

இளையர் இயல்

 476 இளையர் கிழவோற்கு இரவும் பகலும்
     களைதல் இல்லாக் கவயம் போல்வர்.

     இது மேற்கூறிப்போந்த இளையர் ஆவார் இவர் என்கின்றது.

     இ-ள் இளையர் ஆவார் தலைமகற்கு நீங்காக் கவசம் போலும்
 தன்மையர் இரவும் பகலும் என்றவாறு.                            104

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                          ந. அ. 108