258                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உசாவார்க்கு உதவாத ஊனிலா யாக்கைப்
     பிசாசத்தார் கண்ட மணப் பேறு.            தொல். பொ. 92 ந.

 எனவும் கூறுப ஆகலின்,

     [பொருந்திய காதலினாலே எத்தகைய சார்தலுக்கும் எளியோராகித் தாம்
 விரும்பிய மகளிர்  அயர்ந்த செவ்வீ பார்த்து அவர் மெய் தீண்டி இன்புறும்,
 நண்பரையும் கலந்து ஆலோசியாத காமத்தொடர்பு பிசாசர் மணம் ஆகும்.

     ஆடவருக்கு உரிய பெருமையும் உரனும் ஆகிய இயல்பின் நீங்கி,
 இடையே மனமயக்கம்  கொண்டு, தீயன செய்தற்கண் அஞ்சுதலைத்
 தவிர்ந்து, பெண் உடைகண்டஅளவில் மயக்கம்கோடல், தம்மிடத்துள்ளதை
 நண்பர்களின் தேவைக்கு உதவாத, என்புடம்பு உடைய  பசாசம் போல்வார்
 கைக்கொள்ளும் பசாசமணம் ஆகும்.]

     இனிக் கந்தர்வமாவது, கந்தர்வகுமாரரும் கன்னியரும் தம்முள்
 எதிர்ப்பட்டுப் புணர்வது;

     அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்முள்
     எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப - கதிர்ப்பொன்யாழ்
     முந்துஇருவர் கண்ட முனிவுஅறு தண்காட்சிக்
     கந்தருவர் கண்டகலப்பு                    தொல். பொ. 92 ந.

 என்ப ஆகலின்,

     [மகளிரும் மைந்தரும் தம்மில் எதிர்ப்பட்டஅளவில் உள்ளப் புணர்ச்சி
 உற்றுப் பின் மெய்யுறு புணர்ச்சி கோடல்யாழினை  உடைய கந்தருவர்
 கண்ட வெறுப்பற்ற மேதக்க காட்சியினை உடைய கந்தருவர் கண்ட மணம்
 ஆகும்.]

     மாலைசூட்டல் யாதனுள் அடங்கும் எனின், அதுவும் ஒத்த
 அன்பினராய் நிகழ்தலின் கந்தருவப்பாற்படும்.