பொன் சிகரங்களின் முகடுதொறும் ஞான்றுவந்து இழியும் மணிஅருவி பொன்கொழித்து மணிவரன்றி மாணிக்கத்தோடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரல் முரசின் இரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயிலும் கிளியும்பாட, தண்தாது தவிசுபடப் போர்த்த தொரு பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை ஆலவட்டம் விரித்தாற்போலத் தன்கோலக் கலாபம் விரித்து, இளஞாயிற்றின் எறிகதிர் எறிப்ப, ஓர் இளமயில் ஆடுவதுகண்டு நின்றாள் என்க.
அப்பால், தலைவனும் பற்பல் நூறாயிரவர் கூர்வேல் இளைஞரொடு குளிர்மலைச்சாரல் வேட்டம்போய் விளையாடுகின்றான், ஆண்டு எழுந்ததொரு கடமானின் பின் ஓடிக்காவல் இளைஞரைக் கையகன்று, நெடுமான் தேரொடு பாகனை நிலவுமணல் கான்யாற்றில் நிற்கச்செய்து, தொடுகழல் அடிஅதிரச் சுருள்இருங்குஞ்சி பொன் நாணில் பிணித்துக்கட்டிக் கமழ் நறுங் கண்ணிக்கண் வண்டு மணம் அயர, அஞ்சாந்தின் நறுநாற்றம் தண்பொழிலிடைப் பரந்து நாற, வரிசிலை எதிர்கணை ஏந்தி வடிவுகொண்ட காமன்போலச் சென்று அவள் நின்ற இரும்பொழில் புகும். அஃது யாங் கனமோ எனின், வடகடல்இட்ட ஒருநுக ஒருதுளை தென்கடல் இட்ட ஒருகழிசென்று கோத்தாற்போலவும், வெங்கதிர்க் கனலியும் தண்கதிர் மதியமும் தம்கதி வழுவித் தலைப்பெய்தாற்போலவும் புகும் என்க. அதனால் ஒருவர் ஒருவரைத் தலைப்பெய்து காண்பர் என்பது.
"அதுவே
தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்." இறை. அக. 2
என்றார் ஆசிரியர் இறையனாரும் எனக்கொள்க.
[தலைவனுடைய தோழர் இயல்பு, தலைவியின் தோழியர் இயல்பு, தலைவன்
வேட்டை புகுதல், தலைவி தோழியருடன் சோலைபுகுதல், தோழியர் தம்செயல், தலைவி தனித்து இருத்தல்,
|
|
|
|