சோலைவளம், தலைவி மலர்கொய்தல், தலைவன் வேட்டைக்கண் தோழரைப் பிரிந்து தனியன் ஆதல், தலைவி இருந்த பொழில் புகுதல் பற்றிய இச்செய்திகள் இறையனார் அகப்பொருள் இரண்டாம் நூற்பா உரையில் உள்ளன. இப்பண்டைய உரைநடை சுவைத்து இன்புறத்தக்கது.
"தென்கடல் இட்டதோர் திருமணி வான்கழி
வடகடல் நுகத்துளை வந்துபட் டாஅங்கு
.... .... .... .... .... ....
மதியமும் ஞாயிறும் கதிதிரிந்து ஓடிக்
கடல்நிற விசும்பின் உடன்நின் றாஅங்கு". பெருங். உஞ். 32
என்ற பெருங்கதை அடிகள் உளம்கொளத் தக்கன. இங்ஙனம் கூறிப்போந்த காட்சிக்குச் செய்யுள்:
"திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலைஓர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே".
இக்காட்சிக்கண் தலைவனைப் போலத் தலைவியும் அவனை வியந்து கூறுதல் வேண்டுமால் எனின், அது புலனெறி வழக்கு அன்று எனமறுக்க. 115
விளக்கம்
"திருவளர் தாமரை"-
"தாமரை காவிகள் குமிழ் கோங்கு காந்தள் என்ற ஐந்து நிலப்பூக்களாலும்
தொடுக்கப்பட்ட மாலைபோன்ற நங்கை, கொடிபோல அசைந்து அன்னம்போல நடந்து காமன் வெற்றிக்கொடி போலக் காட்சி வழங்குகிறாள்" என்று தலைவியைக்கண்ட தலைவன் சொற்றது.
|
|
|
|