"போதோ விசும்போ"-
"ஒப்பற்ற தில்லையான் இடத்துக் காணப்படும் இம்மாது வாழ்பதி
அவ்வூரோ தாமரையோ வான்உலகமோ நீரோ நாகர்உலகமோ என்று
அறிவது அரிது. இம்மயில் அன்ன சாயலான் இயமன் விடுத்த தூதோ
மன்மதன் துணைவியோ என்பதும் அறிகிலம்" என்று தலைவன் தலைவியின்
வனப்புக் கண்டு ஐயுற்றவாறு.
தலைவன் தலைவிக்கு உரிய பத்து ஒப்புமைகளில் கல்வி ஒன்றாகக்
கூறப்படவில்லை. சங்க இலக்கியத்தலைவி கல்வி கற்றாள் என்று அறிதற்கும்
வாய்ப்பு இல்லை. ஆதலின் அவட்கு ஐயம் நிகழின் அதனைப்
போக்கிக்கொள்ளும் கருவி அவளுக்கு இன்று என்பது கூறப்பட்டது.